சித்தர் பாடல்கள் ( பிண்ணாக்கீசர் )

                பிண்ணாக்கீசர் என்னும் புண்ணாக்கு சித்தர் தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காணவென்று 
         தாவிதிரந்தேளே – ஞானம்மா 
         சரணம் சரணம் என்றே 

அஞ்ஞானமு கடந்து அறிவை மிகசெலுத்தி
        மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் – ஞானம்மா 
         விலையில்லா ரத்தினமடி 

முட்டையினுள்ளே முழுக்குஞ்சு இருப்பதுபோல் 
         சட்டையாம் தேகத்தினுள்ளே – ஞானம்மா 
          தானுயிரு நிற்பதடி 

விட்டகுறை வாராமல் மெய்ஞ்ஞானம் தேராமல் 
         தொட்டகுறை ஆனதினால் – ஞானம்மா 
          தோன்று மெயஞ் ஞானமடி   
         
தம்முள மறியாமல் சரத்தைத் தெரியாமல் 
          சம்சாரம் மெய்யென்று – ஞானம்மா 
          சாகரத்திலே உழல்வார் 

இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் 
         துட்டர்க்கு உபதேசம் – ஞானம்மா 
         சொன்னால் வருமோசம் 

முத்தி பெறுவதற்கும் முதலாய் நினைத்தவர்க்கும் 
         நித்திரையும் விட்டு – ஞானம்மா 
         நினைவோடு இருக்கணுமே 

நினைவைக் கனவாக நீயெண்ணி ப்பார்க்கில் 
        சினமாய் வரும் எமனும் – ஞானம்மா 
         தெண்டனிட்டுப் போவானே 

யோக விளக்கொளியால் உண்மை தெரியாமல் 
          மோகமெனும் குழியில் – ஞானம்மா 
          மூழ்கியே போவார்கள் 

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி 
         ஆத்திதேட நினைத்து – ஞானம்மா 
         அலைவார் வெகுகோடி 

பூச்சும் வெறும்பேச்சும் பூசையும் கைவீச்சும் 
          ஏச்சுக்கு இடந்தானே – ஞானம்மா 
          ஏதொன்றும் இல்லையடி 

கலத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து 
         கணக்கைத் தெரியாமல் – ஞானம்மா 
         கலங்கி அழுதாரடி

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் 
         நாளை என்னாமலல்லோ – ஞானம்மா 
         நலிந்தே அழுவாரடி

கோவணமும் இரவல் கொண்டதூலம் இரவல் 
         தேவமாதா இரவல் – ஞானம்மா 
          தெரியாதே அலைவாரே 

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் 
          உத்தமர் போலப் பேசி – ஞானம்மா 
          உலகில் திரிவாரடி 

காட்டில் இருந்தாலுங் கனகதவஞ் செய்தாலும் 
         காட்டில் குருவில்லாமல் – ஞானம்மா 
         கண்டறிதல் ஆகாதே 

நல்ல வெளிச்சமது ஞான வெளிச்சமது 
         இல்லாவெளிச்சமது – ஞானம்மா 
         ஈனவெளிச்ச்மடி

சம்சாரமென்றும் சாகரமாமென்றும்
         இம்சையடைவோர்கள் – ஞானம்மா 
         இருந்து பயனா வதென்ன 

காத்தடைத்து வந்ததிது கசமாலப் பாண்டமிது 
         ஊத்தை சடலமிது – ஞானம்மா 
         உப்பில்லாப் பொய்க்கூடு 

அஞ்சுபேர் கூடி அரசாளவே தேடி 
          சஞ்சாரம் செய்ய – ஞானம்மா 
           தானமைத்த பொய்க்கூடே  

தொகுப்பு : திருவடி முத்துகிருஷ்ணன் 
            
http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →