திருமந்திர பாடல்கள்

திருமந்திரத்தில் இருந்து 
       சில மந்திரங்கள் 

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை 
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் 
தவனச் சடைமுடி தாமரையோனே 

             எம்பெருமானோடு ஒப்பிட்டு சொல்லக் கூடிய தெய்வங்கள் எங்கு தேடினாலும் இருக்க போவதில்லை . அவனோடு ஒப்பிட்டு சொல்வதற்கு இங்கு யாவரும் இல்லை ஏனெனில் அவனே உலகம் அவனே அனைத்துமாகி இருக்கிறான் , இந்த அண்ட சராசங்களை கடந்து நின்ற நெருப்புமயமான பொன்னைப் பழிக்கும் அளவிற்கு ஒளி மின்னும் சடைமுடியை உடையவன் எம் பரம்பொருள் .

தீயனும் வெய்யன் புனலினும் தணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை 
சேயினும் நல்லன் நல்லன்பர்க்குத் 
தாயினும் நல்லன் தாழ் சடையோனே 

     நம் கர்ம வினைகளை எரிப்பதில் தீயை விட வெப்பம் மிகுந்தவன் . அவனடியார்களை ஆட்கொள்வதில் நல்ல குளிர்ந்த நீரைவிட குளிமையானவன் . ஒரு குழந்தையைப் போல யாவரிடத்தும் நல்லவன் குழந்தைக்கு தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு தெரியாது . அவனையே சிந்தித்து இருப்போர்க்கு அவர்களுக்கு அருகில் உற்ற நண்பரைப்போல அருகிலேயே இருப்பவன் . எல்லாவற்றையும் விட பெற்ற குழந்தையைப் பேணி காப்பதில் தாயை விட நல்லவன் இப்படிப்பட்ட எம்பெருமானை போற்றி அவனருள் பெருமையை அறிவதற்கு ஒருவருமில்லையே . 

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள் 
என்னளந் தின்ன நினைக்கிலார் ஈசனை 
விண்ணளந்தான் தன்னை மேல் அளந்தாரில்லை 
கண்ணளந் தெங்கும் கடந்து நின்றானே .

 உலகமனைத்தையும் தன காலடியால் அளந்த மாயவனும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் நான்முகனும் மற்றும் பிற தேவர்களும் இறைவனை தம் எண்ணத்தால் அளப்பது எளிது என்று நினைத்துவிட்டார் அகில உலகத்திற்கும் ஆதாரமான விண்ணையும் மண்ணையும் கடந்து நின்ற அத்தனை தேவர்க் கதிபதியை தம் எண்ணத்தால் கூட அளந்தவர் யாரும் இல்லை .நம் ஊனக்கண்களை கடந்து அனைத்து இடங்களிலும் அவன் வியாபித்து அனைத்திலும் இருப்பவனாவான் .

யான்பெற்ற இன்பம் பெற இவ்வையகம் 
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் 
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 
தான்பற்ற பற்ற தலைப்படுந்தானே .

நான் அடைந்த பேரானந்தத்தை இவ்வுலகத்தில் உள்ளோர் அனைவரும் அடைய வேண்டும் . வானளாவிய பெருமை மிக்க வேதத்தின் உட்பொருளை சொல்வதென்றால் ஊன் உருகி ஓடும் அளவிற்கு உணர்ச்சி மயமாக்கும் இந்த அற்புத , அனைத்திற்கும் மேலான மந்திரத்தை இறுக பற்றி கொண்டால் உயர்ந்த பேரானந்தம் பெருநிலை வந்து சேரும் .    

  மந்திரங்கள் தொடரும்………..

 என்றும் இறை பணியில் 

அன்பன் சக்திபாலன்   

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →